"கொரோனாவை கட்டுப்படுத்த ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்" – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

ஆக்சிஜன் படுக்கை வசதிகளை பெருக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனை சென்ற அவர், மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தியிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவது கவலை அளிப்பதாக கூறினார்.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, ஆக்சிஜன் படுக்கை வசதிகளை பெருக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட அளவிற்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் தற்போது எடுக்கவில்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் மட்டுமே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தினார்.

கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் வீடு, வீடாக சென்று பரிசோதனை நடத்துவதுடன், காய்ச்சல் முகாம்களை அதிகளவில் நடத்த வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

 

Exit mobile version