பட்டியலினத்தவர்களை இழிவுபடுத்தி பேசியதால்தான் ஆர்.எஸ்.பாரதி கைது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பட்டியலின மக்களை இழிவு படுத்தி பேசியதால்தான் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதாகவும், இதனை வைத்து ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவத்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா தடுப்புப் பணிகள், குடிமராமத்து திட்டப் பணிகள், குடிநீர் திட்டப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராமன், மாநகராட்சி ஆணையர் சதீஷ் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பட்டியலினத்தை சேர்ந்தவர்களை விமர்சித்ததால்தான், வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், பொய்ப் புகார் மூலம் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக விமர்சித்தார். பட்டியலினத்தை சேர்ந்தவர்களை அவதூறாக பேசிய போது, ஆர்.எஸ்.பாரதியை ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Exit mobile version