கரூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த பால் வேனில் இருந்து, 80 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கருப்பூர் கிராமத்தை சேர்ந்த சதீஸ்குமார், தனியார் பால் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் பால் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு, அதனை விநியோகம் செய்த பிறகு, வீரராக்கியம் நோக்கி திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார். அப்போது மாயனூரில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி விட்டு, பங்கிற்குள் சென்றுள்ளார். அந்த நேரத்தில், வேனை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், வேனில் இருந்த 80 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து சதீஸ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் லாவகமாக வேனில் இருந்து பணத்தை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனை வைத்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.