தமிழகத்தில் போலி நிறுவனங்கள் நடத்தி, 3 பேர் கொண்ட குழு ஒன்று, 79 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி புலனாய்வுத் துறையின் சென்னை பிரிவு அதிகாரிகள், கடந்த மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சுமார் 440 கோடி ரூபாய் மதிப்பிலான போலி விலைப்பட்டியல்கள் மூலம், சிலர், 79 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி பெற்று, ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, அடையாள அட்டைகளைப் பெற்று, 54 போலி நிறுவனங்களை தொடங்கியுள்ளனர். மேலும், வங்கி அதிகாரிகளின் துணையுடன், போலி சான்றிதழ் மற்றும் முகவரியில், மற்றவர்களின் பெயர்களில் வங்கிக்கணக்கை துவங்கி உள்ளனர். போலி நிறுவனங்கள் மூலம் சிக்கலான பரிவர்த்தனைகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டது, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மோசடியில் ஈடுபட்ட 3 பேரில், ஒருவரை கைது செய்துள்ள புலனாய்வுத்துறை அதிகாரிகள், இருவரை தேடி வருகின்றனர்.