உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 65 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாகனத்தை சோதனை செய்தனர். கரூரில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற வாகனத்தில், தனியார் ஏடிஎம்மிற்கு பணம் நிரப்புவதற்காக உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. சோதனையின் போது 6 கோடியே 30 லட்சத்திற்கான ஆவணங்கள் இருந்தும், கணக்கில் வராத 65 லட்சம் ரூபாய் பணத்திற்கு எந்த ஆவணமும் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் பணத்தை தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.