சேலம் மாவட்டம் தலைவாசலில் 564 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆசியாவிலேயே பெரிய நவீன கால்நடைப் பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசலில் நவீனக் கால்நடைப் பூங்கா நிறுவப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இப்பூங்காவின் முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களின் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டினப் பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன. நாட்டு நாய் இனங்களுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட வளாகமும் அமைக்கப்பட உள்ளது.
இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களைப் பாதுகாத்துப் பதப்படுத்தவும், மதிப்புக் கூட்டிய பொருட்களைத் தயார் செய்யவும், அவற்றைச் சந்தைப்படுத்தவும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த உலகத்தரம் வாய்ந்த கால்நடைப்பூங்கா அமைப்பதற்கு நபார்டு வங்கி 447 கோடி ரூபாய் நிதியும், தமிழக அரசு 81 கோடி ரூபாயும் ஒதுக்கியதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது