கல்கி ஆசிரமங்களில் சோதனை: ரூ.500 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு

சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமங்களில் நடந்த வருமான வரி சோதனையில், கட்டுகட்டாக பணம், கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்திருப்பதுடன், 500 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சென்னை, ஐதராபாத், பெங்களூரு மற்றும் ஆந்திராவின் வரதய்யாபாளையத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமங்களில் 3 நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது. 40 இடங்களில் நடந்த அதிரடி சோதனைகளில் கட்டுகட்டாக பணமும், கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆன்மிக பயிற்சியின் மூலம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கல்கி ஆசிரமம் கோடி கோடியாக வருமானம் ஈட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வரி ஏய்ப்பு செய்து 409 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் காட்டாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்கி பகவான் மற்றும் அவரது மகன் வீடுகள், அலுவலகங்களில் இருந்து 43 கோடியே 90 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 18 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்கம் மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 271 காரட் வைரம் என 93 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 500 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது வருமான வரி சோதனையில் தெரியவந்துள்ளது.

வருமானத்தை மறைத்து சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version