சட்டம்-ஒழுங்கை பராமரிக்க இயலாத திமுக அரசின் மெத்தனப் போக்கால் படுகொலை செய்யப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வாசீம் அக்ரமின் குடும்பத்தினருக்கு, அதிமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த நாட்டில் சமூக சிந்தனையோடு நல்லதொரு சமுதாயம் வரவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒருவர் வாழவே முடியாதா? என்ற எண்ணத்தை இம்மரணம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட அனைவரையும் இனம்கண்டு, கைது செய்து, உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அன்னாரின் இழப்பை ஈடுசெய்கிற விதமாக தமிழக அரசு அக்குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், அக்குடும்பத்தில் தகுதியான நபருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளையில், வாசீம் அக்ரம் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.