ஆண்டுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி அதிமுக அரசு, கல்வியின் தரத்தை உயர்த்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை, மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் ஆகியோர் இணைந்து முஸ்லிம் மகளிர் சங்கங்களைச் சேர்ந்த 500 மகளிருக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நிதி உதவிகளை வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில், தமிழக அரசின் வருவாயில் மூன்றில் ஒரு பங்கை கல்விக்காக ஒதுக்கி வருவதாக கூறினார். தற்போது தமிழக அரசு, ஆண்டுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி மாணவர்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்கி, கல்வியின் தரத்தை உயர்த்துவதோடு, மாணவர் சேர்க்கையில் சாதனை படைத்து வருகிறது என்றார். இதையடுத்து பயனாளிகளுக்கு துணை முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.