திருப்பதி அருகே கடத்த முயன்ற 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ரேணிகுண்டா பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரேணுகுண்டாவை ஒட்டியுள்ள பால பள்ளி வனப்பகுதியில் இன்று அதிகாலை முப்பதுக்கும் மேற்பட்டோர் செம்மரங்களை சுமந்து செல்வதை கண்ட காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். காவல்துறையினரை கண்டதும், அவர்கள் செம்மரக்கட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு, காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கி தப்பியோடினர். இதையடுத்து அவர்கள் விட்டு சென்ற 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள 27 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் வனப்பகுதிக்குள் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.