தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை, திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் 35 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 14 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. சென்னைத் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தப் பாலங்களைக் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பவானியாற்றின் குறுக்கே 7 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள உயர்மட்டப் பாலத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னை எல்லைச் சாலைத் திட்டத்துக்கான நில எடுப்புப் பணி மேற்கொள்ளும் அலுவலர்களின் பயன்பாட்டுக்கு 5 ஜீப்புகளை வழங்கும் வகையில் அதற்கான சாவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.