அரசு அறிவித்துள்ள அடிப்படை வருமான திட்டம், தமிழகத்திற்கு மிகவும் தேவையான திட்டம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவியாகும் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதியுதவித் திட்டத்தை நீட்டித்து, ஏழைக் குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.