நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், லடாக் பகுதியில், இந்தியா மற்றும் சீனா ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். இந்த மோதலில், ராமநாதபுரம் மாவட்டம், கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் பாதுகாப்பு பணியில் தம்மை அப்பணித்துக் கொண்டு, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி மற்றும் பிற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பழனியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Discussion about this post