கூட்டுறவு வங்களில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். வேளாண் பெருமக்களின் நலனில் என்றும் அக்கறை கொண்டுள்ள அதிமுக அரசு, மத்திய அரசின் நிதி விடுவிப்பை எதிர்பாராமல், இடுபொருள் உதவித்தொகை ஆயிரத்து 717 கோடி ரூபாய் வழங்கியதை முதலமைச்சர் குறிப்பிட்டார். நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய, விவசாயிகள், விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வந்ததை அவர் சுட்டிக்காட்டினார். விவசாய பெருமக்கள் வலுப்பெற வேண்டும் என்ற உயரிய சிந்தனையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சுமார் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பெற்ற, 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். முதலமைச்சரின் பயிர் கடன் அறிவிப்பு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.