வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதாக வந்த புகாரை அடுத்து திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரம் நாடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள காந்தி நகர் பகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு உள்ளது. இங்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
வேலூர் மக்களவை தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் திமுக சார்பாக போட்டியிடுகிறார். தேர்தலில் கதிர் ஆனந்தன் வெற்றி பெற அதிக வாக்குகளை பெற்றுத் தரும் சட்டமன்ற தொகுதிக்கு 50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று துரைமுருகன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல் அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான பொறியியல் கல்லூரி மற்றும் துரைமுருகனின் நெருங்கிய நண்பரும், திமுக செயற்குழு உறுப்பினருமான சக்கரவர்த்தி என்பவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.