சென்னை சாலிகிராமத்தில் சுற்றுப்புற சூழல் அலுவலக கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் நடைபெற்ற சோதனையில், கட்டுக்கட்டாக பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அமைந்துள்ள சுற்றுப்புற சூழல் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பாண்டியனின் அலுவலகம் மற்றும் இல்லத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், அவரது அலுவலகம் மற்றும் வாகனத்தில் இருந்த 88 ஆயிரத்து 500 ரூபாய் கணக்கில் வராத பணம் மற்றும் வங்கி கணக்கில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த 38 லட்சத்து 66 ஆயிரத்து 220 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது இல்லத்தில் நடைபெற்ற சோதனையில், ரொக்கமாக 1 கோடியே 37 லட்ச ரூபாய் பிடிபட்டது. மேலும் 1 கோடியே 22 லட்ச ரூபாய் மதிப்பிலான 3 கிலோ தங்கமும், 5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வைரமும், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரத்து 343 கிராம் வெள்ளியும் சிக்கியது. இதனுடன் 7 கோடி ரூபாய் மதிப்பிலான 18 சொத்து ஆவணங்களும், சேமிப்பு பணம் 37 லட்ச ரூபாயும், ஒரு கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தெரிவித்துள்ளது.