தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம், ஒரு கிலோ தங்கம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு அனுப்பப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் அரசுத்துறை முன்னாள் அதிகாரி ஸ்வப்னா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரது காவல் முடிவடைந்த நிலையில், அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஸ்வப்னாவின் தோழியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 15 லட்சம் ரூபாயும் ஸ்வப்னா கொடுத்து வைத்திருந்த பணம் என சுங்கத்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஸ்வப்னாவின் லாக்கரில் இருந்து பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் விசாரணையில் மனஉளைச்சல் ஏற்பட்டது என்றும், தனது இரு குழந்தைகளையும் காண ஆவலுடன் இருப்பதாகவும் நீதிபதிகளிடம் ஸ்வப்னா தெரிவித்துள்ளார். பின்னர் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவருக்கும் ஆகஸ்டு 21-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே கேரளா முதலமைச்சரின் முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கரன் 27ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக தேசிய புலனாய்வு முகமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.