நாடு முழுவதும் கொரோனா 2வது அலையால் அனைத்துத் துறைகளும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டெடுக்கும் வகையில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதில் சுகாதார உள்கட்டமைப்புக்கு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாயும், பிற துறைகளுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாயுடன் கடன் உத்தரவாதம் அளிக்கப்படும் என்று கூறினார். மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 100 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்று கூறிய அவர், இதற்காக 7 புள்ளி 5 சதவிகித வட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு கடன் வசதி அமலில் இருக்கும் எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சுற்றுலா துறையை ஊக்குவிக்க, இலவச சுற்றுலா விசா திட்டத்தையும் அவர் அறிவித்தார். அதன்படி, 5 லட்சம் பேருக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.