உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர்!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பிரபல ரவுடி விகாஸ் துபே தப்பியோட முயன்றபோது காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கடந்த 3 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் சவுபேபூர் பகுதியில் பதுங்கி இருந்த விகாஸ் துபேவை பிடிக்க காவல்துறையினர் முயன்றனர். அப்போது சிறப்பு காவல் கண்காணிப்பாளர் உள்பட 8 பேரை சுட்டுக்கொன்ற விகாஸ் துபே, அங்கிருந்து தப்பியோடி விட்டார். விகாஸ் துபேவை பிடிக்கும் முயற்சியின் போது அவரது கூட்டாளிகள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று காலை விகாசின் கூட்டாளிகள் இருவர் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மகா காளி கோயிலுக்கு வந்திருந்த விகாஸ் துபேவை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்நிலையில், விசாரணைக்காக மத்திய பிரதேசத்தில் இருந்து வாகனம் மூலம் விகாஸ் துபே உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அழைத்துவரப்பட்டார். இன்று காலை கான்பூர் அருகே பர்ரா என்ற இடத்தில் வந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தப்பியோட முயன்ற விகாஸ் துபேவை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

Exit mobile version