பிரபல ரவுடி நீராவி முருகன் மற்றும் அவனது கூட்டாளியை சுற்றிவளைத்து பிடித்த ஈரோடு மாவட்ட காவல்துறையினருக்கு பாராட்டு குவிந்து வருகின்றன.
தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி நீராவி முருகன் மீது ஆள்கடத்தல் உள்ளிடட் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் கீழவாணித் தோட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை, பணத்திற்காக கடத்திய நீராவி முருகன் மற்றும் ரகுநாத் ஆகியோர் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த பின்னும், சக்திவேலை விடாமல் காவல்துறையினர் மேல் காரை ஏற்றிவிட்டு தப்பி சென்றனர். தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு மாநிலங்களிலும் கைவரிசையை காட்டிய நீராவி முருகன் மற்றும் ரகுநாத்தை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை காவல்துறையினருக்கு நீராவி முருகன் மற்றும் ரகுநாத் நெல்லையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்ற போது இருவரும் காரில் தப்பி உள்ளனர். தப்பி சென்ற இருவரையும் ஈரோடு மாவட்ட காவல்துறையினர் சுற்றிவளைத்து மடக்கி பிடித்துள்ளனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பிரபல ரவுடி நீராவி முருகன் மற்றும் அவனது கூட்டாளியை பிடித்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.