ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை விரட்டி பிடித்து கைது செய்த காவல்துறை

 

பள்ளியில் மாணவர்களிடம் நீ வருங்காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறாய் என்று கேட்டால் டாக்டர், கலெக்டர், வக்கீல் என ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு பதில் வரும். ஆனால் பள்ளியில் படிக்கும் போது டீச்சர் கேட்ட கேள்விக்கு ”நான் ரவுடியாவேன்” என்று கூறி வகுப்பை உறைய செய்த டெரர் மாணவன், காக்கா தோப்பு பாலாஜி.

சிறு சிறு அடி, தடி வழக்குகளில் கைதாகி, பாலாஜி ஜெயில் வாசம் பழகி கொண்டிருந்த காலம்… அன்று, யுவராஜ் என்பவர் தான் சென்னையின் பிரபல ரவுடியாக இருந்தார். கத்தி பிடிப்பதையே கனவாக கொண்ட காக்கா தோப்பின் ரோல்மாடல் யுவராஜ் தான். எனவே டெரர் மாணவர் பாலாஜி, யுவராஜின் குரு குலத்தில் அடைக்கலம் ஆனார்.

யுவராஜ் அண்ட் கோ நிகழ்த்திய பல சம்பவங்களில் கூட்டாளியாக இருந்த பாலாஜிக்கு ஒரு கட்டத்தில் யுவராஜோடு முட்டிக் கொண்டது. குரு என்றும் பாராமல் ஒரு இரவில் யுவராஜை வீடு புகுந்து சம்பவம் செய்து, வட சென்னை ரவுடி கும்பலின் புது தலைவராக உருவெடுத்தார். ஆம் 100 வடசென்னை. ஆயிரம் புதுப்பேட்டை. சேர்ந்தது, காக்கா தோப்பு பாலாஜியின் ரவுடிப் பெரு வாழ்வு.

2000ம் ஆண்டில் புஷ்பா என்பவரையும், 2007ம் ஆண்டில் பாலு என்பவரையும் கொலை செய்ததை தொடர்ந்து, ரியல் கொக்கி குமாரை காவலர்கள் வட்டாரத்தில் பிரபலமாக்கியது. இதற்கெல்லாம் உச்சமாக 2011 ஆம் ஆண்டு வீட்டின் கூரையை பிய்த்து உள்ளே குதித்து பில்லா சுரேஷ் என்பவரை அவரது மனைவி கண்முன்னே தலையை வெட்டி கொலை செய்தார். அந்த சம்பவத்திற்கு பிறகுதான் பாலாஜி, ரியல் ”குமாராக” உருவெடுத்தார்.

கொலை, ஆள்கடத்தல், வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என்றிருந்தவர், சில நாட்களில் துறைமுகம் பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் செம்மர கடத்தல் வியாபாரத்திலும் புகுந்து செழித்து வளரத் தொடங்கியது இந்த ”காக்கா தோப்பு”

காக்கா தோப்பின் அசுர வளர்ச்சி ஊரில் இருந்த பிற களைகளின் கண்ணை உறுத்த தொடங்கியது. வட சென்னை பிள்ளைகள் ஒவ்வொருவரும் இன்னொரு ”ராஜனாக” உருவெடுக்க துடித்தார்கள். அதன்படி காக்கா தோப்பு சென்ற காரின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆனால் காக்கா தோப்புக்கு அன்று மரண கானா ஜஸ்ட் மிஸ்.

எதிரிகள் எல்லை மீறியதால் மரண பயம் கண்ட பாலாஜி தனது கூலிப்படை சேவை மையத்தை விழுப்புரத்திற்கு மாற்றி வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென தனிப்படை அமைத்து காக்கா தோப்பிற்கு வேலி கட்டியிருக்கிறார்கள் காவல்துறையினர். துரத்தி பிடித்து கைது செய்ததோடு தங்கள் வழக்கமான மாவுக்கட்டு கவனிப்பும் அளித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் காக்க தோப்பு சிறைக்கு செல்வது இது முதல்முறை அல்ல. சீசன் சுற்றுலாவிற்கு செல்வது போன்று ஜெயிலுக்கு செல்வதும் திரும்பவதும் அவருக்கு பழக்க பட்டதுதான். ஆனால் இந்த முறையும் அப்படி நடந்து விடக்கூடாது. ஏனெனில் எந்த குற்றமும் செய்யாமல் சில அப்பாவிகள் ஆயுள் முழுக்க சிறைவாசம் அனுபவிக்கும் போது காக்கா தோப்பு போன்ற ரவடிகள் தண்டனையிலிருந்து தப்புவது சட்டத்துறைக்கே இழுக்கு.

Exit mobile version