சிதம்பரத்தில் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகர் கலுங்குமேடு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்கிற கோழி பாண்டியன் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கோழி பாண்டியன், தனது நண்பருடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசியது. இதில் பலத்த காயமடைந்த கோழிபாண்டியனை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பியோடியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கோழி பாண்டியனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் வெடிக்காத குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவருவதாக துணை காவல்கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.