இளைஞர்கள் இருவர் ரவுடி ஆக வேண்டும் என்பதற்காக, அப்பாவியை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காட்சியில் வருவது போல அப்பாவியை அடித்து ரவுடியாக மாற இரு இளைஞர்கள் முயற்சித்துள்ளனர்.
மதுரை பாண்டிகோவில் அருகே வடமாநிலத்தை சேர்ந்த தீரஜ் குப்தா என்ற இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார்.
இவர், மதுரை பைபாஸ் பகுதியில் உள்ள சாலையோரத்தில் கடந்த ஒன்பது வருடங்களாக பானிபூரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
தீரஜ் குப்தாவின் கடையில் பொன்மேனி மற்றும் HMS காலனி பகுதிகளை சேர்ந்த விஜய்பாண்டி, செந்தூர் பாண்டி ஆகிய இரு இளைஞர்களும் தினமும் பானிபூரி சாப்பிடுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்றைய தினம் அந்த இரு இளைஞர்களும் மதுபோதையுடன் காரில் வந்து தீரஜ் குப்தாவிடம் பானிபூரி வாங்கி சாப்பிட்டு விட்டு கடன் சொல்லியுள்ளனர்.
அப்போது ஏற்கனவே இரண்டு நாட்களாக பானிபூரி சாப்பிட்டதற்கான தொகை 40 ரூபாயை அவர்கள் தரவில்லை என்பதால் தற்போது வாங்கிய பானிபூரிக்காவது 20ரூபாய் பணம் தருமாறு தீரஜ் குப்தா கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் தாங்கள் மறைத்துவைத்திருந்த ஆயுதங்களைக் கொண்டு தீரஜ் குப்தாவை கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும், வடிவேலு காமெடியில் வருவதைப்போன்று உன்னைக் கொன்றால் தான் நாங்கள் இந்த பகுதியில் ரௌடியாக முடியும் என்று கூறி பானிபூரி கடையை அடித்து நொருக்கியதோடு தீரஜ் குப்தாவையும் கொலை செய்ய முயன்றுள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞர்களை விரட்டியதால்
அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் படுகாயமடைந்த தீரஜ்குப்தா பொதுமக்கள் உதவியால் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக
அனுப்பிவைக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், கொலை முயற்சியில் ஈடுபட்ட விஜய்பாண்டி, செந்தூரபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.