பழனி மலைக்கோயிலில் வருடாந்திர பராமரிப்புப்பணி காரணமாக ரோப்கார் சேவை திங்கட்கிழமை முதல் 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய மலை மேல் செல்வதற்கு எளிதாக மின்இழுவை ரயில் மற்றும் ரோப்கார் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்புப் பணி செய்யப்படுகிறது.
இதன்படி வருடாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, திங்கட்கிழமை முதல் 45 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பழுதடைந்த உதிரி பாகங்கள், தேய்மானம் அடைந்துள்ள உதிரி பாகங்கள், 800 மீட்டர் நீளமுள்ள இரும்பு கம்பி வடம் ஆகியவை மாற்றப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு விடப்படும். பணிகள் முழுமையாக நிறைவடைய 45 நாட்கள் ஆகும் என்றும், அதுவரை பக்தர்கள் படிவழிப்பாதை மற்றும் மின்இழுவை ரயிலை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.