வெளிச்சத்திற்கு வந்தது விராட் கோலி, ரோகித் சர்மா மோதல்

இன்ஸ்டாகிராமில் அனுஷ்கா சர்மாவை பின்தொடர்வதை ரோகித் சர்மா நிறுத்தியதன் மூலம், அவருக்கும், விராட் கோலிக்கும் இடையே உள்ள மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. இதனால், இந்திய அணி வீரர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகின.

அரையிறுதியில் கோலி எடுத்த தவறான முடிவு தான் இந்திய அணி தோல்வி அடையக் காரணம் என்று துணை கேப்டன் ரோகித் சர்மா விமர்சித்ததாக கூறப்படுகிறது. உலகக் கோப்பை தொடருக்கு பிறகு, கோலிக்கும், ரோகித்திற்கும் இடையே மோதல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. கேப்டன் பதவியில் கோலிக்கு பதில் ரோகித்தை நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்ததால், மோதல் உச்சகட்டத்தை எட்டியது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் விராத் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை பின்தொடர்ந்து வந்த ரோகித் சர்மா, திடீரென பின்தொடர்வதை நிறுத்திவிட்டார். விராட் கோலியுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியதாலேயே, ரோகித் இவ்வாறு செய்ததாக தெரிகிறது. ஏற்கனவே, கருத்து வேறுபாட்டால் ரோகித் இன்ஸ்டாகிராமில் கோலியை பின்தொடர்வதை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version