தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபாடிக் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழில்நுட்ப போட்டியில், மாணவர்களிடையே ஆர்வத்தை அதிகரிக்க இந்த புதிய முயற்சி நிச்சயம் பயனளிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
மதுரை மாநகராட்சி திருவிக பள்ளியில், இந்தோ – அமெரிக்க ஒருங்கிணைப்பு நிறுவனத்துடன் இணைந்து, 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், ரோபோடிக் ஆய்வகம் அமைக்கப்பட்டிருக்கிறது. ரோபோடிக் மீது மாணவர்களுக்கு அதிக ஆர்வம் இருப்பதை நிரூபிக்கும் விதமாக, திறப்பு விழாவிற்கு என பிரத்யேக ரோபோவை வடிவமைத்தனர். ரிப்பன் வெட்டும் கத்தரிக்கோலை அந்த ரோபோ எடுத்து வந்து ஆச்சரியப்படுத்தியது.ஆய்வகத்தில் ஏரளாமான மிகச்சிறிய மின்னணு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் மாணவர்கள் ரோபோக்களை வடிவமைக்கின்றனர்.
ரோபோக்களை உருவாக்குவது, புரோகிராம் எழுதுவது குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.ரோபோடிக் ஆய்வகம் மூலம், உலக நாடுகளில் தொழில்நுட்ப கல்விக்கு ஏற்ப, மாணவர்களின் திறமை மேம்படும் என்று பயிற்சியாளர்கள் கூறியுள்ளனர். எதிர்காலத்தில், ரோபோடிக் தொழில்நுட்பத்தில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.6, 7, மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. கோடை விடுமுறையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மதுரை மாநகராட்சியின் இந்த முயற்சி, மற்ற அரசு பள்ளிகளிலும் அமைப்பதற்கு ஒரு உந்துதலாக இருக்கும் என்று தொழில்நுட்ப ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.