90ஸ் கிட்ஸ்களை குறிவைக்கும் நூதன கொள்ளை கும்பல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் திருமணத்துக்கு பெண் இருப்பதாக கூறி, 90’ஸ் கிட்ஸ்களை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நூதன கொள்ளை கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கேரள மாநிலம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். 32 வயதை நெருங்கிய மூத்த 90’ஸ் கிட்ஸான இவர் திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் மணமகள் தேவை என செய்தி தாள்களில் விளம்பரம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பல்லடம் பகுதியில் இருந்து அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் மணப்பெண் இருப்பதாக கூறி அந்த அப்பாவி 90’ஸ் கிட்ஸின் மனதில் ஆசையை வளர்த்துள்ளார்.

”இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்பதை போல ராமகிருஷ்ணன் பாலகாட்டில் இருந்து பஸ் பிடித்து வந்தால் தாமதாகி விடும் என எண்ணி கார் பிடித்து கனவுக் கன்னியை பார்க்க பல்லடம் வந்துள்ளார்.

ஆனால் அந்த அலைபேசி ஆசாமி தந்த முகவரியில் இருந்த வீடு, திருமணம் முடிந்த மண்டபம் போல அமைதியோ அமைதியாய் இருந்துள்ளது.

ஆனால் மயான அமைதியில் இருந்த அந்த வீட்டை பார்த்து கூட ராமகிருஷ்ணனுக்கு சந்தேகம் வரவில்லை. அந்த அளவிற்கு திருமண ஏக்கம் 90’ஸ் கிட்ஸின் கண்ணை ஜமுக்காளம் போட்டு மூடியுள்ளது.

எனவே பெண்ணை அழைத்து வருவதாக அங்கிருந்த ஒருவர் சொன்ன பேச்சை நம்பி, வீட்டின் முற்றத்தில் அமர்ந்து மிக்சர் சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளார் அந்த பாலக்காட்டு மாதவன்.

பெண் பார்க்கும் படலத்தில் பெரிய திருப்பமாக ஒற்றை பெண் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் 8 பேர் வந்து ராமகிருஷ்ணனை சுற்றி வளைத்துள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் கூச்சலிட தொடங்க கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 சவரன் நகையை கொள்ளையடித்து உள்ளனர்.

பின்னர் அவரை கட்டிப்போட்டு விட்டு ஏடிஎம்ல் இருந்து எடுத்து வைத்திருந்த 40 ஆயிரம் ரொக்கத்தையும் பிடுங்கி கொண்டு அந்த பாலக்காட்டு மாதவனை ரோட்டில் கொள்ளையர்கள் விட்டுள்ளனர்.

இது குறித்து ராமகிருஷ்ணன் அளித்த புகாரில் பேரின் குற்றவாளிகளை தமிழ் நாடு மற்றும் கேரளா காவல்துறையினர் தனித்தனியே தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் கேரள போலீசார் பாலக்காட்டு பகுதியில் பதுங்கியிருந்த 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைமறைவான 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாத விரக்தியில் உள்ள 90’ ஸ் கிட்ஸ்களை குறி வைத்து நடைபெற தொடங்கி இருக்கும் இந்த நூதன கொள்ளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version