மருத்துவர் வீட்டில் திருட்டு: சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளை கும்பல் கைது

சென்னை அடையாறில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை, தனிப்படை காவல்துறையினர் 200 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து சுற்றி வளைத்து பிடித்தனர்.

சென்னை அடையாறில் கடந்த 15ம் தேதி மருத்துவர் ராஜேந்திரன் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 20 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து அடையாறு காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில், குற்றப்பிரிவு ஆய்வாளர் தாமோதரன் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அடையாறில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை மத்திய கைலாஷ், கிண்டி, தியாகராய நகர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். வடபழனி வரை உள்ள கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிக்கப்பட்டன. இறுதியில் வடபழனியில் கங்கையம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள வீட்டில் கொள்ளையன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பார்த்திபன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சாய் கிருஷ்ணன், நிர்மல், பிரபாகரன் ஆகியோர் கைதாகினர். அவர்களிடமிருந்து 30 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 200 சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, சிறப்பாக செயல்பட்டு கொள்ளையர்களை விரைந்து பிடித்த தனிப்படையினரை, காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Exit mobile version