ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று, தமிழ்நாடு முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் 7-ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, மருந்தகங்கள், பால் கடைகளை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சென்னையின் பல்வேறு பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மக்கள் தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம்
முழு ஊரடங்கையொட்டி மதுரை மாநகர பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. காவல்துறையினர் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை எச்சரித்தனர்.
ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்டத்தில் கடை வீதிகள் ஆள் நடமாட்டமின்றி காட்சியளிக்கிறது. முழு ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டத்தில் மருந்தகங்கள், பால் கடைகளை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம்
இதேபோல், முழு ஊரடங்கு காரணமாக விழுப்புரம் மாவட்டம் வெறிச்சோடியுள்ளது. விழுப்புரம், திண்டிவனம் செஞ்சி உள்ளிட்ட இடங்களில், கடை வீதிகள் ஆள்நடமாட்டமின்றி காட்சியளிக்கின்றன. தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோரை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விழுப்புரம் நகர எல்லைப் பகுதிகளான ஜானகிபுரம், கோலியனூர், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு முனை சந்திப்பு பகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.