குன்னூரில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட சேதங்களை மாவட்ட நிர்வாகம் துரிதமாக சரி செய்ததால், போக்குவரத்து சீரானது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று காலை வரை 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. பலத்த மழையால் குன்னூரின் பல்வேறு சாலைகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப் படி, நெடுஞ்சாலைத்துறையினரின் துரித நடவடிக்கையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சேதங்களை 6 ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு சீரமைத்தனர். இதனால் 3 மணி நேரத்தில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல துவங்கின. மண் சரிவு ஏற்பட்ட இடங்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சசிமோகன் நேரில் சென்று பார்வையிட்டு, நெடுஞ்சாலை துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.