தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 13% குறைந்துள்ளதாக போக்குவரத்து ஆணையர் தெரிவித்து உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் மாநில சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட போக்குவரத்து கமிஷனர் சமயமூர்த்தி தமிழகத்தில் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில், சாலை விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 526 ஆகும். அது, 2019 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 6 ஆயிரத்து 522 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 13% குறைவு.
அதே போல, 2018ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் 5 ஆயிரத்து 559 கொடுங்காய விபத்துகள் ஏற்பட்டு இருந்தன. 2019ஆம் ஆண்டின் ஜூலை வரையிலான காலத்தில் இது 15% குறைந்து 4 ஆயிரத்து 979 கொடுங்காய விபத்துகளாக உள்ளன.
தமிழகத்தின் மொத்த விபத்துகளில் 41% இரு சக்கர வாகனங்களால்தான் ஏற்பட்டு உள்ளன, நான்கு சக்கர வாகனங்களால் 27% விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. மோட்டார் வாகனங்களில் சென்று விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 54% பேர் தலைக்கவசம் அணியாத காரணத்தால்தான் இறந்து உள்ளனர்.
விபத்தை ஏற்படுத்துவதில் ஓட்டுநரின் பங்கு 98.39 சதவிகிதமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் ஓட்டுநர் உரிமம் பெற வரும்போது, அவர்களுக்கு அனைத்து போக்குவரத்து விதிகள், சைகைகள் சம்பந்தமான தகுதி எழுத்து தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல தானியங்கி ஓட்டுநர் தேர்வுத் தளம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. – என்று போக்குவரத்துத்துறை ஆணையர் தெரிவித்தார்.
ஐ.நா.சபை நிர்ணயித்த இலக்கின்படி, அடுத்த ஆண்டுக்குள் 50% விபத்துகளை குறைக்க, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த இலக்கை எட்டும் விதத்தில், தமிழக விபத்துகளில் உயிரிழப்புகளைக் குறைப்பதில் 108 ஆம்புலன்ஸ் சேவை பெரும்பங்காற்றி வருகின்றது. அது போலவே தமிழக அரசின் அவசர சிகிச்சை மையங்களும் உயிரிழப்புகளைக் குறைத்து வருகின்றன.
தமிழக அரசிடம் தற்போது 936 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இவற்றோடு தனியாரின் ஐந்தாயிரம் ஆம்புலன்ஸ்களையும் ஒரே எண்ணின் கீழ் இணைக்கும் போது உயிரிழப்புகளை இன்னும் குறைக்கலாம். அரசின் 86 அவசர சிகிச்சை மையங்களுடன் தனியார் அவசர சிகிச்சை மையங்களையும் இணைப்பதும் நல்ல பலன்களைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தோடு நிர்பயா கமிட்டி பரிந்துரையின் படி, வாகனங்களில் ஜி.பி.எஸ். பொருத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. விபத்தில்லா தமிழகத்தை நோக்கிய அரசின் முயற்சிகளுக்கு மக்களும் உதவ வேண்டிய தருணமாக இது உள்ளது.