சாலை விபத்துகளை 5ஜி தொழில்நுட்பத்தின் உதவியுடன் குறைக்கலாம்

ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களால் உலகம் முழுவதும் 13 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஐந்து கோடிக்கும் அதிகமானோர் சாலை விபத்துகளால் காயமடைகின்றனர்.

இத்தகைய விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, வாகனங்களின் வடிவமைப்பில் மாற்றங்களை செய்யவும், வாகனங்களில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது, 5ஜி தொழில்நுட்பத்தின் உதவியுடன் கார் விபத்துக்களை தடுக்க வழிவகை கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு கார் சென்றுக்கொண்டிருக்கும் பாதையில் குழிகள், பனிச்சரிவுகள் உள்ளிட்டவை இருந்தால் அந்த தகவல் காரில் உள்ள சென்சார் மூலம் உணரப்படும். பின்னர் அந்த தகவல் அதே சாலையில் பயணிக்கும் மற்றொரு காருக்கு தெரிவிக்கப்படும். இதேபோன்று அந்த தகவல் பல கார்களுக்கும் சென்றடைந்து, மிகப்பெரிய இணைப்பு சங்கிலியை உருவாக்கும்.

இதனால், குழிகள், பனிச்சரிவுகள் போன்றவற்றால் ஏற்படும் விபத்துக்கள் தவிர்க்கப்படும். அந்த சாலை வழியாக செல்லும் மற்ற கார்கள், வேறு சாலை வழியாக செல்லவும் முடியும்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த Glasgow Caledonian  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் லியரோகாபிஸ், 5ஜி கார் எச்சரிக்கை தொழில்நுட்பம் சில ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரக்கூடும் எனவும், வருங்காலத்தில் தானியங்கி வாகனங்கள் சிறப்பாக செயல்பட இது உதவும் எனவும் கூறினார்.

பல கார் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே 5ஜி தொழில்நுட்பத்தை தங்களது வாகனங்களில் ஒருங்கிணைத்து வருகின்றன. குறிப்பாக Ford உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

தனது நிறுவனத்தின் 80% வாகனங்களில் இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக, Ford நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது.

அதேபோல கடந்தாண்டு barcelona BMW நிறுவனம் ஒரு முன்மாதிரி வாகனத்தை அறிமுகப்படுத்தியது. ஓட்டுநர் தனது கண் பார்வையை மட்டுமே பயன்படுத்தி கட்டுப்படுத்தும் வகையில் அந்த வாகனம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அதேபோல, ஒரு கார் செல்லும் சாலையில் உள்ள சிக்னல்கள் குறித்தும், அந்த சிக்னல்கள் என்ன நிறத்தில் உள்ளன என்பது குறித்தும் முன்னரே தெரிவிக்கும் வகையிலும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

5G தொழில்நுட்பத்தின் இத்தகைய பயன்பாட்டால் சாலை விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version