நதிகள் இணைப்புத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு உள்பட 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை நடத்தவுள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நீர்பாசன இணைப்பு திட்டத்துக்கு 46 ஆயிரத்து 605 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
கங்கை – கோதாவரி, கிருஷ்ணா – காவிரி, காவிரி – பெண்ணை ஆறு உள்ளிட்ட 5 நதிகள் இணைக்கப்படும் என்றும், இதற்கான இறுதி திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பின், நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்த நிதியுதவி அளிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில், நதிகள் இணைப்புத் திட்டம் தொடர்பாக 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை நடத்தவுள்ளது. மத்திய நீர்வள அமைச்சகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலங்கானா ஆகிய 5 மாநில அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா பங்கேற்கிறார். முதற்கட்டமாக மாநிலங்களின் கருத்துகள் இந்த கூட்டத்தில் கேட்கப்பட உள்ளது. நதிகள் இணைப்பு மூலம் தமிழ்நாட்டிற்கு 210 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.
இதில், சென்னைக்கு மட்டும் 2.4 டிஎம்சி தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். நதிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், நாளை நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.