மகாராஷ்டிரம், மேற்குவங்கம், உத்தரப்பிரதேச மாநிலங்களில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பருவந் தவறிப் பெய்த மழையால் வெங்காயம் மற்றும் காய்கறிப் பயிர்கள் நீரில் அழுகிச் சேதமடைந்தன. இதனால் சந்தைகளுக்குத் தேவைப்படும் அளவை விட வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. வெங்காயம் விளைச்சலுக்குப் பெயர்பெற்ற மகாராஷ்டிர மாநிலத்திலேயே நாக்பூரில் ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவிலும் மாநிலத்தின் மற்ற நகரங்களிலும் ஒரு கிலோ வெங்காயம் நூறு ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகரிலும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் சந்தைக்கு வந்தால்தான் விலை குறைய வாய்ப்புள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.