கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அர்த்தனாரி பாளையத்தில் அரிசி ராஜா காட்டு யானையை கண்காணிக்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்த அரசி ராஜா என்ற காட்டு யானை இதுவரை 4 பேரை கொன்றுள்ளது. அரிசி ராஜாவை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக டாப்சிலிப் அருகே உள்ள வரகளியாறு முகாமிலிருந்து பாரி, மற்றும் கலீம் என்ற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
அர்த்தனாரிபாளையம் வந்த அரிசி ராஜாவை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். இருப்பினும் அதிலிருந்து தப்பி மீண்டும் வனத்திற்குள் ஓடியது அரிசி ராஜா. மலை அடிவார வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானையை கண்டுபிடிக்க அதிநவீன டிரோன் காமிரா பயன்படுத்தப்பட்டுள்ளது.
வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் என 70 பேர் அரிசி ராஜாவை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வனபகுதி அருகில் உள்ள கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.