அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தல்… ரூ.3 கோடி கொடுத்து மகனை மீட்ட தந்தை..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரிசி ஆலை அதிபர் மகன் மூன்று கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், ஹாலிவுட் படங்களை பார்த்து, கடத்தலில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

3 அரிசி ஆலைகள்….12 பண்ணை வீடுகள்…பிரமாண்ட திருமண மண்டபம்…கணக்கிட்டால் கணினிக்கே கண்ணைக் கட்டும் அளவிற்கு காந்தி தாத்தாக்களை கைவசம் வைத்திருப்பவர் ஈஸ்வர மூர்த்தி. காங்கேயம் நகர் வாழ் கரன்சி அரசன். இவர் ராஜாங்கத்தின் ஒற்றை இளவரசர் சிவ பிரதீப்.

ஈஸ்வர மூர்த்தியிடம் எவ்வளவு பணம் இருந்ததோ, அதை விட அதிகமான பாசம், மகன் மீது இருந்தது. இளவரசர் கேட்டு இதுவரை அவர் இல்லை என்று சொன்னதே இல்லை. இனோவா கேட்டார்… இரவோடு இரவாக இறக்கப்பட்டது. ஆலை கேட்டார்.. அதன் நிர்வாகம் அப்போதே ஒப்படைக்கப்பட்டது.

மகன் மீது தந்தை பொழிந்த அன்பு கண்டு ஊரே கண் வைத்த நிலையில் அதை பயன்படுத்தி பணம் பறிக்க திட்டமிட்டனர் சிலர். அதன்படி காங்கேயம் அருகே காரில் சென்ற சிவபீரதீப்பை காரோடு சேர்த்து கடத்தி சென்றது ஒரு கும்பல். தங்களை போலீஸ் என்று கூறி சிவபிரதீப்பையும் அவரது ஓட்டுநரையும் தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு அவர்கள் வந்த இனோவா காரையும் ஓட்டிச் சென்றுள்ளனர்.

காரில் ஏறிய பிறகுதான் தான் கடத்தப்பட்டதை உணர்ந்துள்ளார் சிவபிரதீப். எனினும் 7 பேர் சுற்றி இருக்க அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. சிவபிரதீப்பின் ஓட்டுநர் எண்ணில் இருந்து ஈஸ்வர மூர்த்திக்கு போன் செய்த கடத்தல் காரர்கள், மகனின் உயிருக்கு 3 கோடி ரூபாய் விலை வைத்துள்ளனர். போலீசுக்கு போகும் பட்சத்தில் சிவபிரதீப் சிவலோகப் பதவிக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் மிரட்டியுள்ளனர்.

கடத்தல் கும்பல் சொன்ன இடத்திற்கு சொன்ன தொகையோடு சென்று மகனை மீட்டு கொண்டு வந்தார் தந்தை. 3 நாட்கள் இது குறித்து யாரிடமும் அவர் வாய் திறக்கவில்லை. மகனின் பாதுகாப்பை பலப்படுத்தி கொண்டார். பின் காவல் நிலைய படியேறினார்.

போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஆலையில் வேலை செய்யும் சக்திவேல் என்பவர் சிவபிரதீப்பின் நடவடிக்கைகளை நோட்டமிடுவதும், செல்போனில் அதனை யாரிடமோ தெரிவிப்பதுமாக இருந்துள்ளார். இதையடுத்து அவருக்கு வலை வீசிய போலீசார், மதுரை லாட்ஜில் பதுங்கியிருந்த சக்திவேலையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்தனர்.

3 பேர் தலைமறைவான நிலையில் பிடிபட்ட 5 பேரிடம் இருந்து 1 கோடியே 90 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் சிவ பிரதீப்பின் ஆலையில் ஆப்பரேட்டராக வேலை செய்யும் சக்திவேலும் பாலாஜியும் பல ஹாலிவுட் படங்களை பார்த்து ஒரு வார காலமாக திட்டமிட்டு கடத்தல் சம்பவத்தை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரங்கேற்றியது தெரியவந்தது.

கரன்சி அரசர், இளவரசர் மீது காட்டிய எல்லையில்லா பாசத்தை சாதமாக்கி கொண்டு மிரட்டினால் போலீஸுக்கு போக மாட்டார்கள் என்று எண்ணி பணப்பறிப்பில் ஈடுபட்டதும் அம்பமானது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த கதையாக, சம்பளம் தரும் முதலாளியையே கடத்தி சம்பவம் செய்த சக்திவேல் அண்ட் கோவின் செயல் அப்பகுதி வாசிகளை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

 

Exit mobile version