டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த நவம்பர் 4ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஒருநாள் விட்டு ஒருநாள் வாகனங்களை இயக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த சில நாட்களாகக் காற்று மாசின் அளவு கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், ஒற்றைப்படை எண்ணில் முடிவடையும் வாகனங்களை ஒருநாளும் இரட்டைப்படை எண்ணில் முடிவடையும் வாகனங்களை மறுநாளும் இயக்கும் திட்டத்தை நவம்பர் 4ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார். வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் வாகனங்களுக்கும் இது பொருந்தும் என அவர் குறிப்பிட்டார். ஞாயிற்றுக் கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை மட்டும் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் இருந்து இருசக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். இந்தக் கட்டுப்பாட்டை மீறுவோருக்கு 4ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், மக்களவைத் தலைவர், மத்திய அமைச்சர்கள், மக்களவை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் ஆகியோருக்கு இந்தத் திட்டத்தில் இருந்து விலக்களிக்கப்படுவதாகத் தெரிவித்தார். டெல்லி முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் விலக்களிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையர்கள், தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி, மக்களவை மாநிலங்களவைத் துணைத் தலைவர்கள், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோருக்கும் விலக்களிக்கப்படும். காவல்துறை, ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை வாகனங்களுக்கும் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் விலக்களிக்கப்படும் எனத் தெரிவித்தார்.