சென்னையில் ஞாயிற்றுக்கிழமையுடன் முழு ஊரடங்கு முடியும் நிலையில், திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை சில கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டிருந்தேன் என தெரிவித்துள்ளார். தற்போது, ஜூலை 6ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அதன் படி, உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், ஆன்லைன் உணவு சேவைக்கு இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்சல் வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகம் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற செயல்பாடுகளை பொறுத்த வரை, ஜூன் 19ம் தேதிக்கு முந்தைய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.