கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், வரும் நாட்களில் கடுமையான கட்டுபாடுகள் கொண்டு வரப்படும் என்று கூறினார். இதனை ஊரடங்கு என மக்கள் எண்ண வேண்டாம் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், திருமண நிகழ்ச்சிகளில் தற்போது அனுமதிக்கும் கூட்டத்திற்கு மேலும் கட்டுபாடுகள் விதிப்பது, மதகூட்டங்களுக்கு மேலும் கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்டவை குறித்து நாளை தெளிவான அறிவிப்பு வெளியாகும் என்றார்.
கடுமையான கட்டுப்பாடுகள் இன்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என்றும், இந்த நடவடிக்கைகளை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உள் அரங்கில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு முழுமையாக தடை விதிப்பது, விளையாட்டு மைதானங்களை மூடவது, உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறினார்.