இலங்கையில் ராஜினாமா செய்த இஸ்லாமிய அமைச்சர்கள், முன்னாள் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து மக்களின் ஒற்றுமைக்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி பல்வேறு இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 258 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஐ.எஸ். அமைப்பு ஈடுபட்டது விசாரனையில் தெரியவந்தது. இதையடுத்து இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. அரசில் அங்கம் வகித்த இஸ்லாமிய அமைச்சர்கள், ஆளுநர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என நெருக்கடிகள் எழுந்தன.
இந்தநிலையில் கடந்த 3ம் தேதி இஸ்லாமிய அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் உள்ளிட்ட பலர் ஒட்டு மொத்தமாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த அமைச்சர்கள் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் முன்னாள் அதிபரும் எதிர்க் கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினர். அப்போது இலங்கை மக்களின் ஒற்றுமைக்கு ராஜபாக்சே பங்களிப்பு செய்யவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.