சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகலாய உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் பரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு நீதிபதி தஹில் ரமானி வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை ஏற்க மறுத்த கொலீஜியம் தஹில் ரமானியை மேகாலய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்ற மீண்டும் பரிந்துரைத்தது. இதையடுத்துக் கடந்த ஆறாம் தேதி நீதிபதி தஹில் ரமானி தனது பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவருக்கும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் தஹில் ரமானியின் பதவி விலகலைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை அடுத்து நீதிபதி வினீத் கோத்தாரியைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.