பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வங்கிக்குத் திரும்பி வந்த செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அழிப்பதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற ஆர்.டி.ஐ கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு நாளையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதுவரை வங்கிக்கு 15.31 லட்சம் கோடி ரூபாய் வந்துவிட்டதாகவும், 10 ஆயிரத்து 720 கோடி ரூபாய் மட்டுமே திரும்பி வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி அண்மையில் தனது ஆண்டறிக்கையில் தெரிவித்திருந்தது.
செல்லாத நோட்டுகளை அழிப்பதற்கு ரிசர்வ் வங்கி எவ்வளவு செலவு செய்துள்ளது என்பது குறித்து மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுட் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தார்.
அதற்குப் பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கியின் கரன்சி மேலாண்மைப் பிரிவு,15.31 லட்சம் கோடி நோட்டுகள் அனைத்தும் தீவிர ஆய்வுக்குப் பின், கடந்த மார்ச் மாதம் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளது. ரூபாய் நோட்டுகளை அழிப்பதற்கு எவ்வளவு செலவானது என்ற விவரங்களை ரிசர்வ் வங்கி சட்டத்தின்படி தெரிவிக்க இயலாது எனவும் விளக்கம் அளித்துள்ளது.