இந்திய ரிசர்வ் வங்கியிடம் உபரியாக உள்ள ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் வழங்க வங்கியின் இயக்குநர் அவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித் தொகையை அரசிடம் வழங்க வேண்டும் என மத்திய அரசு நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் மும்பையில் ரிசர்வ் வங்கியின் இயக்குநர் அவைக் கூட்டம் அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிமல் ஜலான் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் 2018-2019 நிதியாண்டின் கணக்குப்படி ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித்தொகை ஒரு லட்சத்து 23ஆயிரத்து 414 கோடி ரூபாய், அதிகப்படியான ஒதுக்கு 52ஆயிரத்து 637கோடி ரூபாய் ஆகியவற்றை அரசிடம் வழங்க இயக்குநர் அவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மொத்தம் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 51 கோடி ரூபாய் மத்திய அரசின் கணக்குக்கு மாற்றப்படும்.