கைலாசா நாட்டிற்கென ரிசர்வ் வங்கி – நித்தியானந்தா அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாட்டிற்கென ரிசர்வ் வங்கி மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு கரன்சிகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை நித்தியானந்தா வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்சைகளின் சாமியார் எனப்படுகின்ற நித்தியானத்தா மீது கடந்த ஆண்டு மூன்று சிறுமிகளை ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாக பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பான வழக்கு தீவிரமான நிலையில், சாமியார் நித்தியானந்தா அவரது ஆதரவாளர்களுடன் தலைமறைவானார். இதனையடுத்து கைலாசா என்ற தீவில் பதுங்கியிருந்து சமூக வலைதளங்கள் மூலம் பிரசங்கம் செய்து வந்தார். இதன் பின், கைலாசா நாட்டிற்கென்று சட்டதிட்டங்களை உருவாக்கி தனது பக்தர்களுக்கு குடியுரிமை வழங்கி தனி பாஸ்போர்டையும் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறி அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில், கைலாசா தீவிற்கு அதிகளவிலான நன்கொடைகள் வருவதால், அதனை சேமிக்கும் விதமாக ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்ற வங்கியையும் உள்நாட்டிற்கென்று ஒரு கரன்சியும் வெளிநாட்டிற்கு பரிவர்த்தனைகளுக்கு என்று ஒரு கரன்சியும் அறிமுகப்படுத்த உள்ளதாக நித்யானந்தா கூறியுள்ளார். இது குறித்த முழுமையான அறிவிப்புகளை வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட உள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ள நிலையில், அந்த விழாவிற்கான ஏற்பாடுகளில் அவரது சிஷ்யைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version