நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
சமூக பிரிவை அடிப்படையாகக் கொண்டு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பொதுப்பிரிவில் வரும் உயர் வகுப்பினர் இடஒதுக்கீடு பெறமுடியாமல் இருந்தது. முதல்முறையாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக, இடஒதுக்கீடு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. மத்திய சமூகநிதி மற்றும் அதிகாரத்துறை அமைச்சர் தாவர் ஜந்த் கெலட், மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். பொதுத்தேர்தல் நெருங்கும் வேளையில், 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது தேர்தல் ஆதாயத்திற்காக என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.