இந்திய பொருளாதாரம் ஜெர்மனி, ஜப்பானை பின் தள்ளும் : ஆய்வறிக்கை தகவல்

இந்தியப் பொருளாதாரமானது விரைவில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாட்டின் பொருளாதாரங்களைப் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு வளர்ச்சி அடையும் என்று சர்வதேச அளவிலான ஆய்வறிக்கை ஒன்று கூறி உள்ளது. அது குறித்து விரிவாக தகவல்கள் இதோ..

   
2024ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக இந்தியா மாற வேண்டும் என்ற இலக்கை கடந்த பட்ஜெட் தாக்கலின் போது மத்திய அரசு நிர்ணயித்தது. ஆனால் எதிர்பாராத விதமாக உலக பொருளாதார மந்த நிலை மற்றும் ஜி.டி.பி. வளர்ச்சியில் தேக்கம் ஆகியவை சமீப காலங்களாக இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்து வருகின்றன.
 
இவற்றால், 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை இந்தியப் பொருளாதாரம் எட்டவே முடியாது – என்று எதிர்க்கட்சிகளும், ரகுராம்ராஜன் போன்ற சில பொருளாதார நிபுணர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்திய சர்வதேச ஆய்வொன்று, 2024ஆம் ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டாமல் போனால், கட்டாயம் 2026ஆம் ஆண்டில் அந்த இலக்கை எட்டிவிடும் – என்று கூறி இந்தியர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
 
சிஇபிஆர் (cebr – centre for economics and business research) எனப்படும் பொருளாதாரம் மற்றும் வணிக ஆய்வு மையமானது இங்கிலாந்தில் இருந்து இயங்கிவருகின்றது. இந்த ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்ட “உலக பொருளாதார லீக் அட்டவணை 2020” (World Economic League Table 2020) என்ற அறிக்கையில்தான் இந்தியப் பொருளாதாரம் குறித்த மிக முக்கிய கணிப்புகள் இடம்பெற்று உள்ளன. இதில்,
 
வரும் 2026ஆம் ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும், அப்போது ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
 
மேலும், வரும் 2034ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் இன்னும் பெரிய உயரங்களை அடையும். அப்போது ஜப்பானை பின்னுக்குத்தள்ளி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது.
 
தவிர இன்னும் 15 ஆண்டுகள் கழித்து, உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை உடைய நாடுகளின் பட்டியலில் 3ஆம் இடத்திற்கு இந்தியாவுடன் ஜப்பானும் ஜெர்மனியும் போட்டிபோடும் – என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
 
இந்த ஆய்வறிக்கையால் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வது மீண்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
 

Exit mobile version