ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தைகளை பாதுகாப்பாக மீட்கும் நவீன கருவியை கண்டுபிடிக்கும் நபர்கள் மற்றும் நிறுவனத்திற்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்ககுவதற்கான பரிந்துரையை செய்துள்ளதாக, தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த தீபாவளி தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வலிகள் மிகுந்த தீபாவளியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். சுஜித் மரணம் கடைசியாக இருக்க வேண்டும் என பதிவு செய்துள்ள சந்தோஷ்பாபு, இதுபோன்ற மரணத்தை தடுக்க உடனடி நடவடிக்கை வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக ஒரு போட்டி நடத்தப்பட உள்ளதாகவும், ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தைகளை பாதுகாப்பாக மீட்க தேவையான நவீன கருவிகளை கண்டுபிடிக்கும், தனி நபர் அல்லது நிறுவனங்களுக்கு, முதல் பரிசாக 5 லட்சம் ரூபாய் வழங்குவது தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.