மக்களவை தேர்தலில் முழுமையாக ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று, தலைமை தேர்தல் ஆணையரிடம் 22 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டாக மனு அளித்துள்ளனர்.
அண்மை காலமாக வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பிக்கை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதனால் வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் மாற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் வாக்கு சீட்டு முறைக்கு மாறும் பேச்சுக்கே இடமில்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இந்தநிலையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை நேரில் சந்தித்து ஒப்புகைச் சீட்டு இயந்திரம் தொடர்பாக மனு ஒன்றை அளித்தனர். மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.