14-வது நிதிக்குழு பரிந்துரைத்த ரூபாய் 2 ஆயிரத்து 168 கோடி மானியத்தை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லியில் மத்திய ரெயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து புதிதாக அமைச்சர் பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய அமைச்சரிடம் வழங்கினார். அதில், 14-வது நிதிக்குழு பரிந்துரைத்தப்படி தமிழகத்தில் உள்ள ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2017-18-ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியம் ரூ.560 கோடியே 15 லட்சத்தை உடனடியாக விடுவிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் 2018-19-ம் ஆண்டுக்கான அடிப்படை மானியத்தின் 2-வது தவணைத் தொகையான ஆயிரத்து 608 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.