உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்தேயை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் பதவிக்காலம் நவம்பர் 17ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்துப் புதிய தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்தேயை நியமிக்கப் பரிந்துரைத்து மத்தியச் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்துக்குத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் சரத் அரவிந்த் பாப்தேயைத் தலைமை நீதிபதியாக நியமிக்கக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நவம்பர் 18ஆம் தேதி சரத் அரவிந்த் பாப்தே பதவியேற்றுக்கொள்வார். சரத் அரவிந்த் பாப்தே இரண்டாயிரமாவது ஆண்டில் மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியானார்.
2012ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.